
மதுராந்தகம் அருகே தெருவிளக்கு அமைக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இருளர் சமுதாய மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரும்பாக்கம் இருளர் குடியிருப்பில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
மேலும், இருளில் பாம்புகள் உள்ளிட்ட விச உயிரினங்கள் தீண்டும் அபாயமும் உள்ளது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என பெரும்பாக்கம் பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆயினும், அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோவமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்கள், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது, தெருவிளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.