தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கோரிக்கை மனு பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் மூலம் அரசுக்கு தங்களுடைய நிலைமையை உணர்த்திய பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனிடையே பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.