மகளின் உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், பெண்ணின் உடலை அடக்கம் செய்த காவல்துறையினர்…

 
Published : Oct 18, 2016, 12:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
மகளின் உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், பெண்ணின் உடலை அடக்கம் செய்த காவல்துறையினர்…

சுருக்கம்

திண்டுக்கல்,

கிணற்றில் மாணவி பிணம் மீட்கப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து பெற்றோர் திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால். காவல்துறையினரே பெண்ணின் உடலை அடக்கம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் காலனியை சேர்ந்த சந்தானம் என்பவருடைய மகள் பாண்டிச்செல்வி (17). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12–ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாண்டிச்செல்வி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, பெருமாள் கோவில் காலனி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த பெற்றோர் சென்று பார்த்தபோது, அந்த பெண் இவர்களது மகள் பாண்டிச்செல்வி என்று தெரிந்ததும் பதறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், தனது மகளை சிலர் கொன்று கிணற்றில் வீசியதாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக அவர்கள் ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராகுல், எங்களுடைய மகளுடன் பழகி வந்தார். அவரும், அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து பாண்டிச்செல்வியை கொன்று கிணற்றில் வீசியிருப்பதாக சந்தேகப்படுகிறோம்’ என தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ராகுலை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கடந்த 14–ஆம் தேதி பாண்டிச்செல்வியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவருடைய உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். அதன்பிறகு சனிக்கிழமை காலையில் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், பாண்டிச்செல்வியின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை பாண்டிச்செல்வியின் வீட்டில், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. மனோகரன் சார்பில் ஒரு நோட்டீசு ஒட்டப்பட்டது. அதில் பாண்டிச்செல்வியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இரண்டு நாள்கள் ஆகிவிட்டது. எனவே அவருடைய உடலை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் மூலம் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சியினர் ஏராளமானோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால், கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வதுடன், மறியலையும் கைவிடுவதாக கூறினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 78 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடலை பெற்றுக்கொள்ள மறுத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆர்.டி.ஓ. மனோகரன் அனுமதியை பெற்று, பாண்டிச்செல்வியின் உடலை திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதைத்தனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!