
நேரம் சரியில்லை என்று ஓ.பி.எஸ் குடும்பத்தினர் கருதி வந்த நிலையில் திருஷ்டியை போக்கும் விலை உயர்ந்த வாஸ்து மீன் அவரது வீட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஓ.பி.எஸ்சுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஓ.பி.எஸ்சுக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது. முதலில் ஆதரவாளர்களாக இருந்த பலரும் தற்போது எடப்பாடிக்கு வெளிப்படையாகவே ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.
கட்சியில் பொறுப்புகள் வழங்குவதிலும் கூட ஓ.பி.எஸ் நினைத்தது நடைபெறவில்லை. அதிலும் தென் மாவட்டங்களில் கூட ஓ.பி.எஸ் விரும்பும் நபர்களுக்கு பொறுப்புகள் வழங்க முடியவில்லை. மேலும் தேனி, மதுரை போன்ற பகுதிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஓ.பி.எஸ்சின் பரிந்துரைகளை பெரும்பாலும் ஏற்பதில்லை. இந்த நிலையில் தான் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் ஓ.பி.எஸ்சுக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது. அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு என்று பலரும் கூறி வரும் நிலையில், ஓ.பி.எஸ் குடும்பத்தினர் இதற்கு எல்லாம் காரணம் திருஷ்டி என்று சொல்ல ஆரம்பித்தனர்.
இயல்பாகவே ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன்களுக்கு வாஸ்து மீன்கள் மீது அதிக நம்பிக்கை உண்டு. தேனியிலும் சரி, சென்னையிலும் சரி ஓ.பி.எஸ் வீட்டில் வாஸ்து மீன்கள் உண்டு. இந்த நிலையில் திருஷ்டி அதிகரித்துவிட்டதாக கருதிய ஓ.பி.எஸ் குடும்பத்தினர் சீனாவில் இருந்து விலை உயர்ந்த வாஸ்து மீன் ஒன்றை வரவைழத்துள்ளனர். அந்த மீனின் விலை இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது.