
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டுள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் வீற்றிருக்கின்றனர்.
சிவாஜி கணேசனின் நினைவாக சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப திறப்பு விழாவில் கலந்துகொண்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணிமண்டபத்தை திறந்துவைத்தார்.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், நாசர், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் மேடையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் வீற்றிருந்தனர். அதிமுக அரசையும் அமைச்சர்களையும் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அமைச்சர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்துள்ளார்.
அதிமுக அரசு மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை கமல் முன்வைத்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மேடையில் அனைவரும் ஒன்றாக வீற்றிருக்கின்றனர்.
கமலை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் கமலுக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ரஜினிகாந்துக்கும் பொன்னாடை போர்த்தி கை குலுக்கினர்.
சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவாக இருந்தாலும், அமைச்சர்களும் அரசியலுக்கு வர தயாராக உள்ளவர்களும் ஒரேமேடையில் அமர்ந்திருப்பதால் அந்த மேடை அரசியல் மேடையாக மாறிவிட்டது.