பல்லவர் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டுபிடிப்பு! 1200 ஆண்டு பழமையானது!

Published : Aug 10, 2025, 10:03 PM IST
Pallava Statues

சுருக்கம்

திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொளசூரில் ஓடைப்பகுதியில் 5 அடி உயர கொற்றவை சிற்பமும், ஆலம்பூண்டியில் 3 அடி உயர மூத்ததேவி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன.

திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே உள்ள கிராமங்களில் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்கொண்ட களஆய்வில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மொளசூரில் கொற்றவை சிற்பம்:

திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தின் ஓடைப்பகுதியில் சுமார் 5 அடி உயரமுள்ள கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன், எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சி அளிக்கிறார். அவரது 7 கரங்களில் ஆயுதங்கள் உள்ளன. சிற்பத்தின் மேல் பகுதியில் மானும், சிம்மமும் செதுக்கப்பட்டுள்ளன, இவை கொற்றவையின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிற்பத்தின் கீழ்ப்பகுதியில், தனது தலையை தானே அரிந்து பலி கொடுக்கும் வீரன் ஒருவனும், அவருக்கு எதிரே வழிபாடு செய்யும் அடியவர் ஒருவரும் அமர்ந்துள்ளனர். பல்லவர் கலைப்பாணியின் சிறந்த உதாரணமாகத் திகழும் இந்தச் சிற்பம், கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். மேலும், மொளசூர் ஏரியில் மற்றொரு கொற்றவை சிற்பமும், 2 மூத்ததேவி மற்றும் ஒரு அய்யனார் சிற்பமும் இருப்பதாகவும் அவர் கூறினார். பல்லவர் காலத்தில் மொளசூர் கிராமம் சிறந்த வழிபாட்டு மையமாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

ஆலம்பூண்டியில் மூத்ததேவி சிற்பம்:

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில், ஆலகால ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. கனத்த மார்புகள், சரிந்த வயிற்றுடன், காதணிகள் மற்றும் கழுத்தணிகளுடன் அமர்ந்திருக்கும் மூத்ததேவியின் வலது கை அபய முத்திரையுடனும், இடது கை செல்வக்குடத்தின் மீதும் உள்ளது.

அவரது இரு பக்கங்களிலும் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கைக்கொடியும், துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பம் பல்லவர் காலத்தின் இறுதியில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம் என செங்குட்டுவன் கூறினார். இந்தத் தெய்வத்தை உள்ளூர் மக்கள் காளி எனவும், மானசாதேவி எனவும் வழிபட்டு வருகிறார்கள்.

மொளசூர் மற்றும் ஆலம்பூண்டி சிற்பங்கள், கொற்றவை மற்றும் மூத்ததேவி வழிபாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் தொடர்கின்றன என்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன என்றும் செங்குட்டுவன் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்