தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… எச்சரிக்கும் வானிலை மையம்!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 2:04 PM IST
Highlights

திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. மேலும் இலங்கை கடலோரப் பகுதி, தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்றும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிபேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா, லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!