Jallikattu: கட்டுபாடுகளுடன் ஜல்லிக்கட்டு.. எதற்கெல்லாம் தடை..?முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவல்துறை..

By Thanalakshmi VFirst Published Jan 10, 2022, 6:35 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு போட்டிகளை காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு கிராமத்தினர், வெளி மாவட்ட, மாநிலத்தவர்களுக்கோ அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் திருநாளாம் தை பொங்கலையொட்டி, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாவுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமானோர் குவிவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். 

ஆலோசனைக் கூட்டத்தில் “நாட்டு காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள், இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தகுதியுள்ள காளைகள் மற்றும் வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளில் எந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என வீரர்களும், காளை வளர்ப்பவர்களும் தான் முடிவுசெய்து கொள்ளவேண்டும். வீரர்களோ அல்லது காளைகளோ, ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கூடுதல் காளைகளுக்கு அனுமதி இல்லை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். இந்தாண்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வசதி ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இருந்த டோக்கன் விநியோகம் செய்யும் சிக்கல்கள், முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். நாளை முதல் அடையாள அட்டை விண்ணப்பம் செய்வதற்கான ஆன்லைன் பதிவு செய்யும் வசதி துவங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.டோக்கன் வழங்குவதில் 1 சதவிகிதம் கூட முறைகேடு இருக்காது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டி முடிவில் மறுநாள் போட்டிக்கான அடையாள அட்டை சரிபார்ப்பு பணிகள் நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிகட்டு போட்டியை காண அந்தந்த கிராமத்தினருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அருகில் உள்ள கிராமத்தினர்களோ, வெளி மாவட்ட, மாநிலத்தவர்களுக்கோ அனுமதி வழங்கப்படாது என்று தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உள்ளூர் பிரமுகர்கள் வீடுகளுக்கு உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுப் பகுதிகளில் சோதனை சாவடிகள் வைத்து வெளியூர் நபர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு கூறியுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த, இரு குழுக்களிடமும்  நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு ஏற்படாததால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

click me!