ஆன்லைன் கேமிங் மட்டுமே தற்கொலைக்கு காரணமா? ஆய்வு அறிக்கை வெளியான அதிர்ச்சி தகவல்..!

Published : Feb 18, 2024, 03:21 PM ISTUpdated : Feb 18, 2024, 06:05 PM IST
 ஆன்லைன் கேமிங் மட்டுமே தற்கொலைக்கு காரணமா? ஆய்வு அறிக்கை வெளியான அதிர்ச்சி தகவல்..!

சுருக்கம்

ஆன்லைன் கேமிங் மட்டுமே தற்கொலைகளுக்கு காரணம் இல்லை என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம்  மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காவல் துறையினர் தொடரும் வழக்குகள் மற்றும் தவறான பிரச்சாரங்களால் ஆன்லைன் கேமிங் கடுமையாக பாதிப்படைகிறது என்று ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அதில் வெற்றியையும் கண்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், தற்கொலைக்கும், ஆன்லைன் கேமிற்கும் நேரடியாக தொடர்பு இல்லை என்பது போல் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னையின் முக்கிய சாலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.!

ஆன்லைன் கேம் விளையாட்டில் ஈடுபட்டு அதிக அளவில் நிதி இழப்பீடு ஏற்பட்டதால் தற்கொலைகள் நடந்ததாக தமிழக காவல்துறை பல வழக்குகள் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கூட, “ஆன்லைன் சூதாட்டவிளையாட்டுகளால் அப்பாவி மக்கள் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அதனை தடுக்கும் நோக்கத்துடனே தடை சட்டம் இயற்றப்பட்டதாகவும்” வாதிட்டார். ஆனால் உண்மையில் குடும்ப பிரச்சனை போன்ற வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்பவர்களைக் கூட ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தான் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் வழக்கை திசை திரும்பியதாகவும், வழக்கை விரைந்து முடிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 

தமிழகத்தில் நடந்த பல தற்கொலைகளுக்கு ஆன்லைன் கேமிங் தான் காரணமாக உள்ளது என்ற பிரச்சாரம் ஆன்லைன் கேமிங் மீது பொது மக்களுக்கு கடுமையான வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த வாதங்களும், தற்கொலை வழக்குகளும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிவதற்காக தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை நியமித்தது. 

இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நடத்திய ஆய்விலும், ஆன்லைன் கேமிங் மட்டுமே தற்கொலைகளுக்கு காரணம் இல்லை எனக்கூறியது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுஒருபுறம் இருக்க திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்ததைச் சுட்டிக்காட்டி ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் வழக்கில் வெற்றியையும் பெற்றன. 

இதையும் படிங்க: மிரட்டும் பறவைக்காய்ச்சல்.. அலறும் பொதுமக்கள்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

இருப்பினும் இன்றளவும் மக்கள் மனதில் ஆன்லைன் ரம்மி போன்ற கேமிங் விளையாட்டுக்கள் பணம் பறிப்பவையும் என்றும், இதனால் பலரது உயிரை பறித்துள்ளது போன்ற பிம்பங்கள் முழுமையாக விலகவில்லை. இந்நிலையில்  பஞ்சமாஹால்ஸ் கோத்ராவில் உள்ள கோவிந்த் குரு பல்கலைக்கழக அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் மற்றும் மனநல பேராசிரியர் டாக்டர் சந்தீப் என்பவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நடத்திய ஆய்வில், திடுக்கிடும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதாவது பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்களின் தற்கொலைகளுக்கு ஆன்லைன் கேமிங் மட்டுமே காரணமாக இல்லை குடும்ப பிரச்சினைகளும் காரணமாக அமைந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. டாக்டர் சந்தீப் மேற்கொண்ட தீவிரமான நேரடி கள ஆய்வு தற்கொலைகளுக்கு குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் தற்கொலைகளுக்கு ஆன்லைன் கேமிங் மட்டுமே காரணமாக இருப்பதாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான குழுக்கள் தவறான பிரச்சாரம் செய்கின்றன எனக்கூறப்பட்டுள்ளது. டாக்டர் சந்தீப் குழுவின் ஆய்வு முடிவை வேறு சில ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன.

சில அறிவியல் ஆய்வு முடிவுகளில் ஆன்லைன் கேம் விளையாடுவது குழந்தைகளுடைய மூளை வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்க உதவுவதாகவும், வயதான காலத்தில் ஏற்படக்கூடிய டிமென்ஷியா, அல்சைமர் போன்ற மறதி நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   ஆன்லைன் கேமிங் மத்திய மாநில அரசுகளுக்கு 6 ஆயிரத்து 428 கோடி வரி வருவாய் ஈட்டி தந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆன்லைன் கேமிற் ஆதரவாகவும் எதிராகவும் சமமாக கருத்து இருந்தாலும் இதன் இறுதி முடிவு அரசு கையில்தான் உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!
Tamil News Live today 20 December 2025: குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!