தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக ஆன்லைன் கேம் நிறுவனர்கள் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளனர். இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலைகள்
ஆன்லைன் சூதாட்டத்தால் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து நடுத்தெருவில் பல குடும்பங்கள் இன்றைய தேதியில் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அதிமுக மற்றும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடைக்கு தடை வாங்கியது. இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது திமுக தலைமையிலான அரசு. இதனையடுத்து மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் ரவியோ பல மாதங்கள் காத்திருப்புக்கு பின் கடந்த 10 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார்.
அமலானது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! மீறி விளையாடினால் என்ன தண்டனை தெரியுமா.?
ஒப்புதல் அளித்த ஆளுநர்
இதனையடுத்து இந்த சட்ட மசோதாவிற்கு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விளையாட்டை தமிழகத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீறி விளையாடினோலோ, விளம்பரம் செய்தாலோ அபராதத்தோடு சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆன்லைன் கேமிங் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் நீதிபதியோ சட்ட மசோதா ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதற்குள் ஏன் இந்த அவசரம் என கேள்வி எழுப்பி மசோதாவிற்கு ஓப்புதல் கொடுத்த பின்னர் வழக்கு தொடருங்கள் என கூறி திருப்பி அனுப்பி வைத்தது.
நீதிமன்றத்தில் வழக்கு- ஆன்லைன் கேம் நிறுவனம்
இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு கடந்த 10 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் கொடுத்து நிலையில், இதற்கு எதிராக ஆன்லைன் கேமிங் நிறுவனம் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆன்லைன் கேம் நிறுவன அதிகாரி கூறுகையில், ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை நாட அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தங்கள் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். சட்ட ரீதியாக செயல்பட்டு வரும் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் திறமை அடிப்படையிலான விளையாட்டை தமிழக அரசு சூதாட்டம் என நினைப்பதாகவும் ஆன்லைன் கேம் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்