ஓ.என்.ஜி.சி. குழாயில் மீண்டும் உடைப்பு; விளை நிலத்தில் எண்ணெய் கசிந்ததால் கிராம மக்கள் பதற்றம்...

First Published Aug 9, 2018, 12:17 PM IST
Highlights

நாகப்பட்டினத்தில் விளை நிலத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம், சேத்திரபாலபுரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு மற்றும் எண்ணெய் சேமிக்கும் கிடங்கு உள்ளது. கதிராமங்கலம் எண்ணெய் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் இந்தக் குழாய் வழியாக தான் சேத்திரபாலபுரத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.

இந்தக் குழாய் அஞ்சலாற்றங்கரையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் விளைநிலத்தின் வழியாக செல்கிறது. இந்தக் குழாயின் நேற்று முன்தினம் திடிரென உடைப்பு ஏற்பட்டு எரிவாயு மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் விளைநிலத்தின் மேற்புறத்தில் எண்ணெயும், எரிவாயும் வெளியானது. 

இதனைக் கண்ட விவசாயி கோவிந்தன் பதறிப் போனார். பின்னர், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலகத்தின் மூலம் காவல்துறைக்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் எண்ணெய் கசிவைப் பார்வையிட்டனர்.

பின்னர், எண்ணெய் கசிவைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். அரை மணி நேரத்திற்குப் பிறகு எண்ணெய் கசிவும் தடுத்து நிறுத்தப்பட்டது. விளைநிலத்தில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனக் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட தகவல் அந்தப் பகுதியில் வேகமாக பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!