கதிராமங்கலம் மட்டுமல்ல…எங்கிருந்தும்  நாங்கள் வெளியேறமாட்டோம்… ஓங்கி அடித்த ஓஎன்ஜிசி…

First Published Aug 13, 2017, 7:05 AM IST
Highlights
ongc manager press meet


கதிராமங்கலம் மட்டுமல்ல பணிகள் நடைபெற்று வரும் எந்த இடத்தில் இருந்தும் வெளியேற மாட்டோம் என்று ஓ.என்.ஜி.சி. மேலாளர் ராஜேந்திரன்  உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓ.என்.ஜி.சி. மேலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் எண்ணெய் கிணறுகள் அமைப்பது குறித்து விளக்கமளித்தார்.

அப்போது நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நெடுவாசல் மக்களுக்கு ஓ.என்.ஜி.சி. தரப்பில் எப்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவியல் ரீதியில் சரியானது தான் என்று அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம். கதிராமங்கலம் பகுதியில் அப்படி செய்ய முடியவில்லை ஏனெனில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் நிர்வாகம் சில காலம் பொறுத்திருக்கச் சொல்லியுள்ளது. நிச்சயம் மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்.

நெடுவாசல் திட்டம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு திட்டம் ஓ.என்.ஜி.சி. விளக்கம் அளித்தது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்திற்கு சென்ற பின்னர் அதில் எந்த கருத்தையும் ஓ.என்.ஜி.சி. சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்தார்..

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்று எதிர்காலத்தில் எதுவும் நடக்கக் கூடாது என்று மக்கள் போராடுகின்றனர். ஓ.என்.ஜி.சி.யும் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறது. எண்ணெய் குழாய்கள் தொடர்ந்து பொறியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ராஜேந்திரன் தெரிவித்தார்.

மக்கள் நலன், சுற்றுப்புற சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டே ஓ.என்.ஜி.சி. செயல்படுகிறது என்றும்  காவிரிப்படுகையில் 110 இடங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்டுவதற்கான திட்டம் முதல் கட்ட பரிசீலனையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

கதிராமங்கலத்தில் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும்  இங்கு மட்டுமல்ல தற்போது நாங்கள் பணியாற்றிவரும் எல்லா இடங்களிலும் அது தொடரும் என்றும்   ராஜேந்திரன்  உறுதிபட தெரிவித்தார்.

 

 

 

click me!