
சென்னையில் நேற்று அதிகாலை நடந்த பைக்ரேசின்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிகேசவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை நகரில் இரவு நேரங்களில் பணத்தை வைத்து பைக் ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பைக் ரேஸ்களில் ஏராளமானோர் இறந்துள்ளனர்.
சென்னை காமராஜர் சாலையில் நேற்று அதிகாலை 30-க்கும் மேற்பட்டோர் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது டி.வி.எஸ். விக்டர் வண்டியும், போர் நினைவுத்தூண் வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி சென்ற எமஹா பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில், டி.வி.எஸ். விக்டர் பைக்கின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்தது. இந்த பைக்கில் சென்ற திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த இப்ராஹிமுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இவருடன் பயணித்த ஹென்ஸ் என்பவருக்கு கை, கால் மற்றும் முகம் பகுதிகிளில் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவை இழந்தார். எதிரே வந்த டி.வி.எஸ். விக்டர் பைக்கில் பயணம் செய்த ஆதிகேசவன் தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆதிகேசவன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மற்ற இருவர் சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதுபோன்ற பைக் ரேஸ்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பைக் ரேஸ்களைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன.