#BREAKING : புது உருமாறிய ஒமைக்ரான் கோரோனா .. தமிழகத்தில் கட்டுபாடுகள் அறிவிப்பு ..!

By Thanalakshmi VFirst Published Nov 28, 2021, 7:25 PM IST
Highlights

தமிழகத்தில் புதிய உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனாவால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
 

அதிக வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக கூறப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் 'ஒமைக்ரான்' உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் துவங்கி இரண்டு ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில், தற்போது புதிதாக அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் தென்பட்டுள்ளது. இதற்கு, 'ஒமைக்ரான்' என, உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.தென் ஆப்ரிக்கா, மொசாம்பிக் போன்ற நாடுகளிலும், ஹாங்காங்கிலும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து டில்லியில் நடத்தப்பட்ட முக்கிய ஆலோசனை கூட்டத்தில், நம் நாட்டில் இந்த புதிய வகை வைரஸ் பரவுவதற்கு முன்னரே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், அதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, சர்வதேச விமான பயணங்களுக்கான தடைகளை தளர்த்தும் முடிவினை மறுபரிசலினை செய்யும்படி வலியுறுத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஓமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரதுறை செயலர் அனுப்பிய சுற்றறிக்கையில், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது.  தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை 8 நாட்களுக்குப்பின் மீண்டும்  பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தவும் மாவட்ட கலெக்டர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரிய  வந்துள்ளதாகவும் எனவே,தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து  தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது எனவும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் பல வகைகளில் உருமாறியதாக உள்ளதாகவும், முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவக் கூடியதாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே மிக அதிக பாதிப்பு மற்றும் உயிர் பலி ஏற்பட்டுள்ள டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதிய வகை வைரஸ் தென்பட்டுள்ளது, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிக அதிக அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள இஸ்ரேல், இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!