
நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனை இடிந்துவிழுந்து 8 பேர் உயிரிழந்தததையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பழைய பணிமனைகளை ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடட்த்தை மாற்ற வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த பணிமனையில் இரவு ஷிப்ட் முடிந்து பேருந்துகளை நிறுத்திவிட்டு 11 ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை இந்த பணிமனை, கட்டட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 11 ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கட்டட இடிபாடுகளில் சிக்கினர்.
உடனடியாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். 8 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆண்வு மேற்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பழைய பணிமனைகளை ஆய்வு செய்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார். உடனடியாக விபத்து நடைந்த பொறையார் பணிமனையை பார்வையிட செல்லவுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.