யாரையும் உள்ளே விடக்கூடாது, வங்கிக்கு பூட்டுப் போடுங்க – உத்தரவு போட்ட வங்கி மேலாளர்…

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
யாரையும் உள்ளே விடக்கூடாது, வங்கிக்கு பூட்டுப் போடுங்க – உத்தரவு போட்ட வங்கி மேலாளர்…

சுருக்கம்

விருதுநகர்,

விருதுநகரில் உள்ள அரசுடமை வங்கிக்குள் வாடிக்கையாளர் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று வங்கிக்கு பூட்டு போடும்படி உத்தவிட்டுள்ளார் வங்கி மேலாளர். இதனைக் கண்டித்து வாடிக்கையாளர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மதுரை சாலையில் அரசுடமை வங்கி கிளை இருக்கிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சம்பள கணக்கு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கணக்கு என பல்வேறு கணக்குகள் இந்த வங்கியில் உள்ளது.

மாதத்தின் முதல் வாரம் என்பதால் அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும், உள்ளாட்சி நிறுவன ஊழியர்களும் தங்களது சம்பள கணக்குகளில் பணமெடுக்க இந்த வங்கிக் கிளைக்கு வந்திருந்தனர்.

இதுதவிர வருடத்தின் முதல் வாரம் என்பதால் டெபாசிட் தாரர்களும் தங்கள் டெபாசிட் கணக்கை புதுப்பிக்க வங்கிக்கு வந்தனர்.

ஏற்கனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இந்த அரசு வங்கி கிளை மதியம் 2½ மணிக்கே பூட்டப்பட்டு விட்டது.

வாடிக்கையாளர்கள் யாரையும் வங்கி கிளைக்குள் அனுமதிக்க கூடாது என வங்கி மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வங்கி வாடிக்கையாளர்கள் யாரையும், காவலாளிகள் உள்ளேச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வங்கி முன்பு பதற்றம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளரின் இந்த செயலைக் கண்டித்து வாடிக்கையாளர்களும், அரசு ஊழியர் சங்கத்தினரும் வங்கிக்கிளை முன்பு கச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த விருதுநகர் மேற்கு காவலாளர்கள் மறியல் நடந்த இடத்திற்குச் சென்று மறியல் செய்தவர்களை சமரசப்படுத்த முயன்றனர்.

வங்கிக் கிளையை திறப்பதற்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

பின்னர், வங்கிக் கிளை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பிரச்சனையால் வங்கிக்கிளை ஒரு மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!