"ரெட்டிக்கு பணம் மாற்றி கொடுத்த வங்கி அதிகாரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை??" - நீதிபதி சரமாரி கேள்வி

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 10:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
"ரெட்டிக்கு பணம் மாற்றி கொடுத்த வங்கி அதிகாரிகள் ஏன் கைது செய்யப்படவில்லை??" - நீதிபதி சரமாரி கேள்வி

சுருக்கம்

தொழிலதிபர் சேகர் ரெட்டி கணக்கில் காட்டாமல் கருப்பு பணம் வைத்திருந்ததாக வருமான வரித்துறையினர், அவரை கைது செய்தனர். மேலும் கடந்த நவம்பர் 9ம் தேதி ரிசவர் வங்கி வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதைதொடர்ந்து அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், இதன்பின்னர், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ரூ.8 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருந்ததாக மற்றொரு வழக்கை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை சி.பி.ஐ. கூடுதல் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, 3 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி பரபரப்பான உத்தரவு பிறப்பித்தார். அதில், நீதிபதி கூறியிருப்பதாவது:–

சேகர்ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையில், கடந்த டிசம்பர் 9ந் தேதி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ரூ.8 கோடிக்கு பறிமுதல் செய்துள்ளதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர்களிடம் இருந்து ரூ.24 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.75 கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக 3வது வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் 9ம் தேதி வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகளாக இவ்வளவு பெரிய தொகை ஒரே மாதத்தில் இவர்களுக்கு எப்படி கிடைத்தது.

இடையில் உள்ள ஒரு மாதத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பொதுமக்களுக்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டுகளை அதிகளவில் வைத்துள்ளவர்கள், வங்கியில் டெபாசிட் செய்து, வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் மட்டும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது சேகர்ரெட்டிக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது.

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றால், அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு அவசியம் தேவை. மத்திய அரசு, ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காகவும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஊழியர்கள் இரவும், பகலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பணம் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்த பணம் ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்பவில்லை.

வங்கிகள் மூலமும் விநியோகம் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில், புதிய ரூபாய் நோட்டுகள் என்ன ஆனது. எங்கே போனது? நாடு முழுவதும் இந்த பணத்தை பெறுவதற்காக வரிசையில் நின்ற 76 பேர் இறந்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் சம்மேளனம் ஒரு அதிர்ச்சிகரமான தீர்மானத்தை இயற்றியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் போனதற்கு ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்களை குறிப்பிட்டு தான் ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு விநியோகம் செய்யும். இந்த எண் குறித்துள்ள ஆவணங்களை பெற்றால், யார் யாருக்கு? யார் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்றது? என்பதை எளிதாக கண்டறிந்து விட முடியும்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது என்றால், வங்கி மேல் மட்ட உயர் அதிகாரிகள் தொடர்பு இதில் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மேல் மட்ட உயர் அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்படவில்லையே?

வங்கியின் கீழ் மட்ட அதிகாரிகள் மட்டும் வழக்கில் சிக்சியுள்ளார்கள்.  மேல் மட்ட அதிகாரிகளின் துணையின்றி, இந்த கீழ் மட்ட வங்கி அதிகாரிகளால் இந்த முறைகேட்டில் ஈடுபட முடியாது.

எனவே, அந்த மேல் மட்ட அதிகாரிகள் யார் யார்? என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியது, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியின் கடமையாகும்.

நாட்டில் நிலவும் வறட்சியால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனவேதனையில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட துயரமான சூழ்நிலையிலும், ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள பணத்தை பொறுத்தவரை, யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற உண்மை கைதாகியுள்ள சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு மட்டுமே தெரியும் என சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகின்றனர். இது ஏற்று கொள்ளும் விதமாக உள்ளது.

எனவே, சேகர்ரெட்டி உள்பட 3 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகிறேன். 4ம் தேதி மாலை 6.15 மணி முதல் 6ம் தேதி மாலை 6.15 மணி வரை, இந்த 3 பேரையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து விசாரிக்கலாம்.

இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!
பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!