
மதுரை
கந்தக அமிலம் கசிவு, எரிவாயு கசிவு அல்லது வேறு எதாவது ஆபத்தோ வந்தால் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றும் மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் (சட்டம்) சத்யபிரியா, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 24 ஆண்டுகளாக சட்ட விதிமுறைகளை பின்பற்றி இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் இரண்டாவது யூனிட் விரிவாக்க பணிகள் அண்மையில் நடந்து வந்தன. அப்போது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஸ்டெர்லைட் ஆலை படிப்படியாக மூடப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்தார். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தற்போது ஆலை மூடப்பட்டு உள்ளதால் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 16–ஆம் தேதி ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கந்தக அமிலம் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.
அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்திற்குச் சென்று குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்க முடியவில்லை. இதேபோல, எல்.பி.ஜி. எரிவாயு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளன.
தொடர்ந்து இவற்றை பராமரிக்காமல் வைத்திருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகளோ ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு விபத்துகள் நடந்தால் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, கழிவுகளை அகற்றவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் குறிப்பிட்ட பணியாளர்களை காவல் பாதுகாப்புடன் அனுப்பவும், தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.