
நீலகிரி
நீலகிரியில் தோட்டத்தில் இருந்த இரண்டு மின் மோட்டார்களை திருடிய வட மாநில இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ளது இரண்டாவது மைல் பகுதி, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவர் தனது தோட்டத்தில் இருந்த இரண்டு மின் மோட்டார்களை காணவில்லை என்று கூடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் அந்தப் பகுதியில் நடந்து சென்ற வட மாநில இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கெளதம் (27) என்பதும், அதே பகுதியில் கட்டட வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.
மேலும், மின்மோட்டார்களை திருடியதும் அவர்தான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது,. அதனையடுத்து, அவரிடம் இருந்து இரண்டு மின் மோட்டார்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
மின் மோட்டார்களை திருடிய குற்றத்திற்காக கௌதமை காவலாளர்கள் கைது செய்தனர்.