Omicron : தமிழகத்தில் ஓமைக்ரான் பாதிப்பா? விளக்கம் அளித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்!!

By Narendran SFirst Published Nov 30, 2021, 5:10 PM IST
Highlights

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் இந்த ஒமைக்ரான் வகை வைரசால் உலக மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் இணைந்து மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் கூட்டம் அதிகம் கூடும் 8 இடங்களில் பொதுமக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், முடிவுகள் அனைத்தும் டெல்டா வைரஸ் என்றே வருவதாகவும் தெரிவித்தார். ஒமிக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை என்ற அமைச்சர் மா.சுப்ரமணியம், ஒமிக்ரான் வைரஸ் குறித்து விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டறிவதற்கு வசதி உள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

click me!