அடுத்த முறை தூத்துக்குடிக்கு கடல் விமானத்தில் வந்துதான் இறங்குவாராம் - நிதின் கட்காரி நம்பிக்கை...

Asianet News Tamil  
Published : Feb 27, 2018, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
அடுத்த முறை தூத்துக்குடிக்கு கடல் விமானத்தில் வந்துதான் இறங்குவாராம் - நிதின் கட்காரி நம்பிக்கை...

சுருக்கம்

Nitin Gadkari hopes next time he will come by water plane to Tuticorin

தூத்துக்குடி

அடுத்த முறை தூத்துக்குடிக்கு வரும்போது, கடல் விமானத்தில் வந்து இறங்க சாத்தியம் இருக்கிறது என்று நம்புகிறேன் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் ரூ.23 கோடியே 69 இலட்சம் செலவில் தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் சரக்கு வாகனம் நிறுத்தும் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடந்த இதன் திறப்பு விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாராஜ் நட்டர்ஜி எம்.பி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை கப்பல்துறை மற்றும் நீர்வளங்கள், ஆறு வளர்ச்சி, கங்கை புத்துணர்வு மந்திரி நிதின் கட்காரி பங்கேற்று சரக்கு வாகனம் நிறுத்தும் முனையத்தை திறந்து வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 8-வது கப்பல் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அதிநவீன சரக்கு பெட்டகம் பளுதூக்கி எந்திரங்கள், 9 நகரும் பளுதூக்கிகளையும், துறைமுக தகவல் மையத்தையும் மத்திய மந்திரி நிதின்கட்கரி தொடங்கி வைத்தார்.

அப்போது மந்திரி நிதின் கட்காரி பேசியது: "கோதாவரி நதியில் இருந்து ஆண்டுக்கு 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இதனால் கோதாவரியை காவிரியுடன் இணைத்து, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்துக்கு காவிரியில் 175 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடல் ஆதாரத்தை மேம்படுத்த சாகர் மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.2.5 இலட்சம் செலவில் 104 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும்.

வ.உ.சி. துறைமுகம் நெசவு ஏற்றுமதிக்கு ஆதாரமாக விளங்கும் என்று நம்புகிறோம். மேலும் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - புதுச்சேரி - சென்னை வரை கடல் வழியாக நீர்வழி போக்குவரத்து பாதை அமைக்க இணை மந்திரி பொன்.,ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள பல நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தி, அதன்மூலம் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த முறை நான் தூத்துக்குடிக்கு வரும்போது, கடல் விமானத்தில் வந்து இறங்க சாத்தியம் இருக்கிறது என்று நம்புகிறேன். இது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்.

49 சதவீதம் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக கப்பல் போக்குவரத்து இருப்பதால், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் மீன்வளத்தையும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்காக தமிழ்நாட்டுக்கு 100 இழுவைப்படகுகள் கட்ட அனுமதித்து உள்ளோம்.

தமிழகத்துக்கு நேற்று முன்தினம் ரூ.45 ஆயிரம் கோடி சாலை திட்டங்களை அறிவித்துள்ளோம். துறைமுகங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 இலட்சம் விபத்து நடக்கிறது. இதில் 1½ இலட்சம் பேர் இறக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இறந்து வருகின்றனர். இதனால் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். இதுபோன்ற சரக்கு வாகன முனையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன் நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜயின் தவெக 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துமா? தோற்குமா? பிரபல ஜோதிடரின் கணிப்பு
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்