
திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலை ஆக்கிரமிப்பை அடுத்து, சென்னை திரிசூலம் மலையில் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பரமஹம்சர் நித்தியானந்தாவின் சீடர்கள் பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்த இடமென்று கூறப்படும் பவழக்குன்று மலை புனிதமான இடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் நித்யானந்தாவின் ஆட்கள், சாமி சிலைகளை வைத்தும், நித்யானந்தா அமர்ந்ததாக கூறப்படும் இடத்துக்கு மஞ்சள் பூசியும் வழிபட்டனர்.
இதனை அப்பகுதி பொதுமக்களும், சிபிஎம் கட்சியினரும், தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நித்யானந்தாவின் சீடர்கள், அந்த பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியை ஒருமையில் பேசியும், காலி செய்ய முடியாது என்றும் சாபமிட்டுள்ளனர்.
இயைடுத்து, நித்யானந்தாவின் சீடர்களை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். அது மட்டுமன்றி அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், இதேபோன்று சென்னை திரிசூலம் மலையில் உள்ள பச்சையம்மன் கோயில் நிலத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் முகாமிட்டு ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை அவர்கள் அடைத்து இந்த முகாமை அமைத்துள்ளனர். இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள், நித்தியானந்தா சீடர்களை விரட்டி அடித்துள்ளனர். மேலும், அவர்களின் வண்டிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். நித்தியானந்தா சீடர்களின் ஏசி வசதியுடன் கூடிய கேபின்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.