
நிலவேம்பு குடிநீர், தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்று, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இணை மருத்துவர் பார்த்திபன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிலவேம்பு குடிநீரை பயன்படுத்தினால் ஆண்மைத்தன்மையில் இழப்பு ஏற்படும் என்றும், பல்வேறு பக்கவிளைவுகள் எற்படுத்தும் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இணை மருத்துவர் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிலவேம்பு குடிநீர் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்று கூறினார்.
எந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலிலும் நிலவேம்பு குடிநீரால் பக்கவிளைவுகள் இருப்பதாக தெரிவிக்கவில்லை. எனவே இதனை ஒரு மருந்தாக அனைத்துவிதமான காய்ச்சல்களுக்கும் பயன்படுத்தலாம் என்றார். மாநில மருந்து கட்டுப்பாட்டு உரிமம் எண், நிலவேம்பு பாக்கெட்டில் இருந்தால் மட்டுமே வாங்கவும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலவேம்பு குடிநீர் காய்ச்சப்பட்ட பின் 3 மணி நேரத்துக்கு மட்டுமே வீரியம் இருக்கும் என்றும் அதற்குமேல் அதை வைத்திருந்தும் பயனில்லை என்றும் மருத்துவர் பார்த்திபன் தெரிவித்தார்.