புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்‍கும் : வானிலை மையம்!

First Published Dec 3, 2016, 10:18 AM IST
Highlights


நடா புயல் கரையை கடந்த போதிலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் மழை நீடிக்‍கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

தென்மேற்கு வங்கக்‍கடலில் உருவான Nada புயல் வலுவிழந்து, காரைக்‍கால் அருகே நேற்று காலை கரையைக்‍ கடந்தது. எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில், தி.நகர், மயிலாப்பூர், ஆயிரம் விளக்‍கு, எழும்பூர், ராயப்பேட்டை, கிண்டி, ஈக்‍காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

கரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலை, மாயனூர், அணைபாளையம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, பாலவிடுதியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

 

வேலூர் மாவட்டத்தில், வேலூர், அரக்‍கோணம், காவேரிப்பாக்‍கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, அரக்‍கோணத்தில் 28 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

 

இதேபோல், விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்‍கோட்டை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. விருதுநகரில் மாலை தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. சிவகாசியிலும் 2 மணிநேரத்துக்‍கும் மேலாக கனமழை பெய்தது. 

புதுக்‍கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. புயல் எச்சரிக்‍கை காரணமாக, ஜெகதாப்பட்டினம், கோட்டைபட்டினம் மீனவர்கள் மற்றும் கடற்கரை பகுதி மீனவர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்‍க கடலுக்‍குச் செல்லவில்லை. 

 

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறைமுகத்திலும் மீனவர்கள் மீன்பிடிக்‍கச் செல்லவில்லை. குளச்சலில் நூற்றுக்‍கணக்‍கான விசைப்படகுகள் கரை ஒதுக்‍கப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்‍கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மழை நீடிக்‍கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

click me!