Tamilnadu Rain : உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

Published : Nov 30, 2021, 02:51 PM IST
Tamilnadu Rain : உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

சுருக்கம்

#Tamilnadu Rain | தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்த புவியரசன், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டார். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என்று கூறிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில்  கனமழை பதிவாகியுள்ளதாகவும் அதிகபட்சமாக தேனி மாவட்டம் வீரப்பாண்டியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறிய புவியரசன், இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகரக்கூடும் என்றும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவித்தார். இந்த புயல் வரும் 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும் என்று கூறிய அவர், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு அந்தமான் கடற்பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்தார். நாளை அந்தமான் கடற்பகுதி மற்றும் அந்தமான் தீவு, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு அடுத்த 3-4 நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

செங்கோட்டையன் நமது பலம்..! தூக்கி தலை மேல் வைத்துக் கொண்டாடிய விஜய்
எடப்பாடி பழனிசாமியை வம்புக்கு இழுத்த செங்கோட்டையன்.. டைம் பார்த்து பழிவாங்கிய செங்க்ஸ்