
திருப்பூர்
தங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு சாராயக் கடை புதிய சாராயக் கடை வேண்டாம் என்றும் திருப்பூர் ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திர்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இதில் திருப்பூர் 35–வது வார்டு விஜயாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது. ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகள் வேறு பகுதிகளில் திறக்கப்பட்டு செயல்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக எங்கள் பகுதியில் ஒத்தக்கடை பிரிவில் டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைந்தால் அதிகப்படியான விபத்து ஏற்படும். ஏற்கனவே விஜயாபுரத்தில் ஒரு டாஸ்மாக் சாராயக் கடை இயங்கி வருகிறது. எனவே மக்களின் நலன்கருதி இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.