
விநோத கழிவறை
தமிழகத்தில் கழிவறை இல்லாத பகுதிகளில் கழிவறை கட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டது. இதனையொட்டி கிராமங்களில் கழிவறைகள் இல்லாத இடங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சார்பாக கழிவறை கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்டுள்ள கழிவறை ஒன்று கிண்டலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் 70வது வார்டு ராஜிவ் காந்தி நகர், அம்மன் குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறையில், ஒரே கழிவறையினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.
கிண்டலுக்குள்ளான கழிவறை
எதற்காக இருவர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை எனவும், குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என்றாலும் கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஒரே அறையில் இரு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்