
அதிகமான வட்டி கேட்டு தொல்லை கொடுக்கும் கந்துவட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்ததற்குப் பிறகு கந்துவட்டி கொடுமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என்ற கருத்து உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
கந்துவட்டி தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடுவதாகவும் கந்துவட்டிக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.