நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் - தூத்துக்குடியில் வெடிக்கும் போராட்டங்கள்…

First Published Sep 5, 2017, 7:24 AM IST
Highlights
Need to permanently cancel the selection option - Tuticorin explosive protests ...


தூத்துகுடி

அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்றன. கல்லூரில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று காலை 11 மணி அளவில் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு தெற்கு மாவட்டச் செயலாளர் கௌதமன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அருந்ததி அரசு, மாவட்டப் பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், முருகேசன், ஜான், அன்புசெல்வன், சந்தணம், பெரியசாமி, மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அமர்நாத் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் சுரேஷ், மாநகரப் பொறுப்பாளர் பிரவீன், தலைவர் ஜாய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் கல்லூரியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.

அதேபோன்று, நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று காலையில் போராட்டம் நடந்தது.

இதற்கு மகளிர் பாசறை மண்டலச் செயலாளர் குந்தவி தீபா தலைமை வகித்தார். தென்மண்டலச் செயலாளர் குயிலி, நெல்லை மண்டலச் செயலாளர் தமிழ்செல்வி, மழலையர் பாசறைச் செயலாளர் இனியா, செய்தித் தொடர்பாளர் தங்கமாரியப்பன், மாவட்டத் தலைவர் மாரியப்பன், செயலாளர் பாண்டி, பொருளாளர் ஜெயபாஸ், பொதுக்குழு உறுப்பினர் குந்தன், தொகுதி இணைச் செயலாளர் முத்துவேல் உள்பட பலர் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

click me!