
திருவண்ணாமலை
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அனிதாவுக்கு நீதி கேட்டும் மோடி மற்றும் இபிஎஸ்-ன் உருவப்படத்தை எரித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிக மதிப்பெண் பெற்றும் ‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்புக்கான ‘சீட்’ கிடைக்காத மன உளைச்சலால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிற நிலையில் நேற்று அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து ஊர்வலம் நடத்தினர்.
இதற்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். இதில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கல்லூரியின் முன்பு மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவுக்கு நீதி வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கல்லூரியில் ஆரம்பித்த ஊர்வலம் காமராஜர் சிலை, காந்தி சிலை வழியான பெரியார் சிலையை வந்தடைந்தது.
பெரியார் சிலை வரை ஊர்வலமாக வந்த மாணவர்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சரின் உருவப்படத்தை எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளர்கள் இதனை அணைத்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் காவலாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.