நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக கோவை வஉசி பூங்காவில் திரண்ட மாணவர்கள்…உடனடியாக கைது செய்தது போலீஸ்…

First Published Jul 21, 2017, 6:36 PM IST
Highlights
Neduvasal protest....Covai students organised protest in voc park


நெடுவாசல் பிரச்சனைக்காக கோவையில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இரவு பகலாக கிராம மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று 102 ஆவது நாளாக அங்கு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை வஉசி மைதானத்தில் திடீரென திரண்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.

100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தியும் இதுவரை மத்திய மாநில அரசுகள்  இதற்கு செவி சாய்க்கவில்லை என்றும், அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் வஉசி மைதானத்தில் கூடிய மாணவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கொஞ்சம், கொஞ்சமாக மாணவர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த காவல் துறையினர். இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என கூறி அங்கிருந்த மாணவர்களை உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டுக்காக  நடைபெற்ற போராட்டத்தின் போது கோவை வஉசி மைதானத்தில் தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

click me!