
பெரம்பலூர்
பெரம்பலூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கை வழி விவசாய சாகுபடி குறித்து மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டு பாடம் கற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபட்டு, அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கனவாய், வேலூர், வாலிகண்டபுரம், ஒகளூர், வேப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் இயற்கை வழி வேளாண்மையை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வில், இயற்கை சாகுபடி செய்யப்பட்டுள்ள பந்தல் காய், கனிகள், பழத்தோட்டம், சிறுதானிய சாகுபடி, நாட்டுக்கோழி வளர்ப்பு, மரச்செக்கு, பரண்மேல் ஆடு வளர்ப்பு, புதிய தொழில்நுட்ப முறையில் மாட்டுக்கொட்டகை அமைத்தல், மண்புழு வளர்த்தல், மீன் வளர்த்தல் ஆகியவற்றைப் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் தொழில்நுட்ப முறைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வேப்பூரில் உள்ள பாமரர் ஆட்சியியல் கூடத்தில் இயற்கை வழி விவசாயிகளுடன் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுகளின்போது, பாமரர் ஆட்சியியல் கூட ஒருங்கிணைப்பாளர் சரவணன், இயற்கை வழி தொழில்நுட்ப வல்லுநர் ஏகாம்பரம், ஐதராபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவன அலுவலர்கள் ரமேஷ், ஜலஜா உள்பட இயற்கை விவசாயிகள் உடனிருந்தனர்.