
புதுக்கோட்டை
நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு தயாராவது குறித்த ஆயத்த மாநாடு நடத்தி தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டையில் ஆலோசித்தனர்.
"மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை, மக்கள் விரோதப் போக்கைக் கண்டிப்பது" உள்ளிட்ட 12- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 25-ஆம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்துவதென பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதற்கு தயாராவது தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆயத்த மாநாடு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்குத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம் தலைமை தாங்கினார்.
தொமுச அகில இந்திய செயலாளர் ஆர்.எத்திராஜ், ஏஐடியுசி மாநில துணை பொதுச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், ஏஐசிடியு மாநில செயலாளர் சி.தேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த மாநாட்டில், நாடு தழுவிய மறியல் போராட்டத்திற்கு தயாராவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த போராட்டம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு கேட்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.