
அரியலூர்
அரியலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பதைக் கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம, கீழப்பழூவூர் அருகேயுள்ள வாழைக்குழி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ரூ.38 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், அந்தத் தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு சரியான பதிலை அளிக்காமல் அலட்சியத்தோடு நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் சினம் கொண்ட தொழிலாளர்கள் அவ்வழியேச் சென்ற நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கீழப்பழூவூர் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தையில், நீங்கள் செய்யும் பணியினை கணக்கில் கொண்டுதான் சம்பளம் வழங்கப்படுகிறது. இனி அதிகம் வேலை செய்து அதற்கேற்ப ஊதியம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வட்டார வளர்ச்சி அலுவர் தெரிவித்தார்.
அதனைக் கேட்ட தொழிலாளர்கள், கொடுத்த வேலையை தானே செய்தோம் என்று கேட்டுவிட்டு, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.