
திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “5 தலைமுறை கண்ட இயக்கம். 5வது தலைமுறையை தற்போது உதயநிதி வழிநடத்தி வருகிறார். ஒருவர் பிறந்த நாளில் வெள்ளாடை அணிந்துகொள்வதையே விரும்புவார்கள். ஆனால் உதயநிதி இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் பெரியாருக்கு பிடித்த கருப்பு ஆடையை அணிந்திருந்தார்.
கருப்பு உடையில் தான் மக்களை சந்தித்தார். உதயநிதி திராவிட இயக்கத்தை அடுத்த 50 ஆண்டுகள் எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த இயக்கத்திற்கு இளம் பெரியாராக உதயநிதியைக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசினார்.
இந்நிலையில் அமைச்சர் எவ வேலுவின் கருத்துக்கு தமிழக வெற்றி கழக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பெரியார் என்றால் உங்களுக்கு அவ்வளவு மழிவாகிவிட்டதா உங்களுக்கு? எவ்வளவு பெரிய கொடுமை. பெரியார் ஒரே நேரத்தில் 8 பதவிகளை ராஜினாமா செய்தவர். இவர்கள் பதவிக்காகவே உயிர்வாழ்கின்ற ஜென்மங்கள். உதயநிதியையெல்லாம் பெரியார் என்று சொல்லாமா? அப்படி சொல்லியதால் இவர்கள் பெரியாரை இழிவுபடுத்தி இருக்கிறார்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.