
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
அண்ணா பிறந்ததினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள்களில், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. தமிழக சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளை, சட்டம் - சிறைவிதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அதன்படி கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தமிழக
அரசின் அரசாணையைத் தொடர்ந்து, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், தமிழக அரசின் முடிவு குறித்தும், அதற்கான பட்டியலைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது, 10 ஆண்டுகளுக்குமேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த பட்டியலில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியல் குறித்து தமிழக அரசு விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.