நீதிமன்றத்தில் இந்து ராம் எப்படி பேசலாம்? மாஜிஸ்திரேட்டிடம் விளக்கம் கேட்கிறது உயர்நீதிமன்றம்!

By vinoth kumarFirst Published Nov 21, 2018, 10:51 AM IST
Highlights

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச அனுமதிக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேச அனுமதிக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தொடர்பு படுத்தி நக்கீரனில் கட்டுரை வெளியானது. இதனை தொடர்ந்து ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 124ன் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். செய்தி வெளியிட்டதற்காக ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது பிரச்சனையானது.

 

இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் கோபால் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை கவனிக்க பத்திரிகையாளர் என்.ராம் வந்திருந்தார். அவரிடம் நக்கீரன் கோபால் மீதான வழக்கு குறித்து ஊடகங்களின் பிரதிநிதியாக கருத்து கூறும்படி மாஜிஸ்திரேட் கோபிநாத் கேட்டுக் கொண்டார். 

இதனை தொடர்ந்து பேசிய ராம், நக்கீரன் கோபால் மீது பிரிவு 124ல் வழக்கு பதிவு செய்திருப்பது தவறான முன்னுதாரணம் என்றார். செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்தால் ஆளுநர் அவதூறு வழக்கு தொடரலாமே தவிர பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார் ராம். மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக பிரிவு 124ல் நக்கீரன் கோபால் மீது தான் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ராம் குறிப்பிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபாலை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து பல தரப்பில் இருந்தும் இந்து ராமுக்கு பாராட்டுகள் கிடைத்தது. பிறகு நக்கீரன் கோபால் பத்திரிகையாளர் என்.ராமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து கவுரவித்தார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாத் நீதிமன்றத்தில் என்.ராமை பேச வைத்தது சினிமாத்தனமாக இருந்ததாக கூறினர். 

மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் ராம் பேச அனுமதிக்கப்பட்டார் என்று மாஜிஸ்திரேட் விளக்கம் அளிக்க நோட்டீசும் அனுப்பப்பட்டது. மேலும் நீதிமன்றங்களில் சட்டங்களுக்கு உட்பட்ட விசாரணை முறைகள் இருக்க வேண்டும் என்றும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு அங்கு இடம் இல்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

click me!