
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “நம் நாட்டின் வீரவரலாற்றை தன்னில் தாங்கி நிற்கும் கோட்டைகள் நிறைந்த புதுக்கோட்டை மண்ணில் இன்று நம் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழா மக்களின் பேராதரவுடன், இந்தியாவின் அரசியல் சாணக்கியர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உற்சாகத்துடன் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொல்லியல் சின்னங்கள், கல்வி நிறுவனங்கள், வணிகம் ஆகிய துறைகளில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக புதுக்கோட்டை வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் இத்தனை வளமும், மக்களின் கடின உழைப்பும் இருந்தபோதிலும், விடியா திமுக அரசு புதுக்கோட்டையின் அடிப்படை பிரச்சனைகளை புறக்கணித்து, மக்களிடம் வெறுப்பு அரசியலையும் தன் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் ஒரு முதல்வரின் ஆளுகையில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
வறட்சிப் பிரதேசமாகக் கருதப்படும் புதுக்கோட்டையில்,குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாகி,பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்டத் தலைநகரமாக இருந்தும், சாலைகள் சீர்கெட்டு, வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பல பகுதிகள் நீரால் சூழப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இந்த விடியா திமுக ஆட்சியின் அலட்சிய போக்கிற்கும் வெறுப்பு அரசியலுக்கும் 2026 இல் புதுக்கோட்டை மக்களும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் உறுதியுடன் பதிலடி கொடுப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கரூரில் 41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்ததே செந்தில் பாலாஜி தான். அவரைக் காப்பாற்றுவதற்காகத் தான் இரவோடு இரவாக அனைத்து உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன” என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார்.