
விழுப்புரம்
விழுப்புரத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மனைவி இத்தனை மாதங்கள் எங்கு இருந்தார்? என்பதை அறிய உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று அவரது கணவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம், சங்கர் என்பவர் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “நான் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஈயனூரில் வசித்து வருகிறேன். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எனது மனைவி நந்தினி மாயமானார். அவரைக் கண்டுபிடித்து தரக்கோரி வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு அளித்தேன். அதன்பிறகு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த கலையரசி என்பவர் வீட்டில் இருந்ததாகக் கூறி காவலாளர்கள், என் மனைவியை ஒப்படைத்தனர்.
ஆனால், கலையரசி வீட்டில் விசாரித்தபோது நந்தினி என்ற பெண் அங்கு வரவே இல்லை என்று தெரிவித்தனர்.
எனவே, எனது மனைவி நந்தினிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளியாகும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.