
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அன்புசெழியனின் மேலாளர் முருகன் என்பவரை வளசரவாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன்தான் எனவும் அவர் கொடுக்கும் கந்துவட்டி டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் திரண்டு பேட்டியளித்தனர். கந்துவட்டியை ஒழிக்கவேண்டும் என கூக்குரலிட்டனர்.
இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன. மேலும் நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் மேலும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அதனால் அவர் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டார். அன்புசெழியனின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனிடையே, முன் ஜாமின் கோரி நேற்று அன்புசெழியன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்புசெழியனின் நிறுவனத்தை கவனித்து வந்த அவரின் மேலாளர் முருகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரிடம் அன்புசெழியன் எங்கு இருக்கிறார். அவரிடம் எப்படி தொடர்பு கொள்வது என்பன குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி வருகின்றனர்.