
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் 3 கிலோ எடையுள்ள ரூ.86.45 லட்சம் மதிப்பிலான தங்கவேல்கள், கொழுசாயுதம், சேவல் கொடி ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.
சென்னை தியாகராய நகர் மற்றும் பாடியில் உள்ள தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன தலைவர் எஸ்.எஸ்.சரவணா என்ற பொன்துரை, தனது தாயார் லெட்சுமி யோகரத்னம், மனைவி பாலசெல்வி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார்.
அவரது குடும்பத்தினர் சார்பில் 3 கிலோ 50 கிராம் எடையுள்ள ரூ.86,45 லட்சம் மதிப்பிலான தங்கத்தால் செய்யப்பட்ட கொழுசாயுதம், 2 வேல்கள், சேவல் கொடி ஆகியவற்றை கோயிலுக்கு காணிக்கையாக சண்முக விலாச மண்டபத்தில் வைத்து வழங்கினர்.
அதனை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் கொழுசாயுதம் மூலவர் சுப்பிரமணி சுவாமிக்கும், ஒரு வேல் சுவாமி ஜெயந்திநாதருக்கும், ஒரு வேல் மற்றும் சேவல் கொடி சுவாமி சண்முகருக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.