
நாகையில் வேறு ஆண்களுடன் பழகிய காதலியை காதலன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர் துர்கா. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரை துர்கா காதலித்து வந்தார்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் வாழ்க்கை நகர்த்தி கொண்டிருந்தனர். ஆனால் காலப்போக்கில் மதன்ராஜிடம் இருந்து துர்கா விலக ஆரம்பித்தார். தொலைபேசி உரையாடல்கள், முகநூல் சேட்டிங்ஸ் ஆகியை படிப்படியாக குறைந்தன.
இது குறித்து துர்காவிடம் மதன்ராஜ் கேட்ட போது தேர்வு, படிப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி சமாளித்து வந்துள்ளார். இருப்பினும் மதன்ராஜின் மண்டையில் சந்தேகப் பொறி கிளம்பியது.
துர்காவின் முகநூல் பாஸ்வேர்டை முன்னரே தெரிந்து வைத்திருந்த மதன்ராஜ், அதனைப்பயன்படுத்தி தனது காதலியின் கணக்கை பரிசோதித்தார். அப்போது துர்கா பல ஆண்களுடன் குறுஞ் செய்திகள் மூலம் உரையாடி இருப்பதைக் கண்டு மதன்ராஜ் ஆவேசமடைந்தார்.
இதற்கிடையே காதலி துர்காவை சீர்காழி அடுத்த பூம்புகார் கடற்கரைக்கு வரவழைத்த மதன்ராஜ், முகநூல் உரையாடல்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு வெடித்தது.
ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்ற மதன்ராஜ் ஒருகட்டத்தில் அங்கிருந்த கருங்கல்லை தூக்கி துர்காவின் தலையில் போட்டார். இதில் தலைசிதறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே 6 மணி நேர இடைவெளிக்குப் பிறகு மதன்ராஜ் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சமூக வலைத்தளங்கள் சமூகத்தை சீரழிக்கிறதா?