"தொண்டை மண்டல மடத்தில் இருந்து நித்யானந்தா ஆட்களை வெளியேற்ற வேண்டும்" - முதலியார் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

First Published Aug 2, 2017, 12:59 PM IST
Highlights
mudhaliyar groups protest


காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தா ஆட்களை வெளியேற்ற வேண்டியும், ஆதீனத்தை நீக்க வேண்டியும், காஞ்சி அனைத்து முதலியார் சங்க அமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‘

காஞ்சிபுரம், பரமசிவன் கோயில் தெருவில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் மடம் உள்ளது. இந்த மடத்தின் 232-வது பட்டமாக திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் இருந்து வருகிறார். 

தொண்டை மண்டல ஆதினத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கும்மேல் சொத்துக்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் மிகவும் பழமையான விலை மதிக்க முடியாத மரகத லிங்கமும், பாண லிங்கமும் இந்த மடத்தில் உள்ளன. தொண்டை மண்டல ஆதீன மடத்தைச் சேர்ந்த நிர்வாகிகளே இந்த சொத்துக்களை கவனித்தும் பராமரித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன், நித்தியானந்தாவின் சீடர்கள், ஆதீன மடத்தில் தங்கியிருப்பதாக புகார் எழுந்தது.

அது மட்டுமல்லாமல், மடத்தில் சிவலிங்க பூஜையை மாற்றி,  நித்யானந்தா பூஜை செய்து வருவதாகவும், மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு நித்யானந்தாவின் சீடர்கள் ஆசி வழங்குவதாகவும், மடத்தின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும், அவர்கள் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பேசுவதற்கு, மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை மாலை வர கூறியிருந்தார். ஆனால், தொண்டை மண்டல முதலியார்கள் சங்க குழு மடத்துக்கு சென்றபோது, மடம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர், மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி இருக்கலாம் என்றும், அவரை நித்யானந்தாவின் சீடர்கள் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி, பெரிய காஞ்சீபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் பெங்களூருவில் இருப்பதாக தெரியவந்தது. 

திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாரை, போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, பூஜைக்காக பெங்களூரு வந்திருப்பதாகவும் ஓரிரு நாட்களில் காஞ்சிபுரம் வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியர், நேற்றிரவு காஞ்சி தொண்டை மண்டல மடத்துக்கு வந்தார். 

ஆனாலும், தொண்டை மண்டல முதரியார் சங்க அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மடத்தில் இருந்து நித்யானந்தா ஆட்களை வெளியேற்றி, ஆதீனத்தை நீக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர்.

click me!