பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்;

First Published Aug 1, 2017, 8:30 AM IST
Highlights
More than 2000 farmers stranded road strike to irrigate water


ஈரோடு

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள கோவை - ஈரோடு செல்லும் சாலையில் நேற்று காலை 10 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் உள்பட சுமார் இரண்டாயிரம் விவசாயிகள் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவலறிந்ததும் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, தாசில்தார் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள், “கடந்த 30 ஆண்டுகளாக பவானி ஆற்றில் இருந்து பாசனத்துக்கு அரசின் அனுமதியுடன் முறைப்படி மின் இணைப்புப் பெற்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இந்த நிலையில் குடிநீருக்கு தண்ணீர் தேவைப்படுவதால் ஆற்றில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் எடுக்க வேண்டாம் என்று ஆட்சியர் பிரபாகர் கூறினார். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.

இந்த நிலையில் நாங்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து, ‘எங்கள் பயிர் நாசமாவதற்கு முன்பு நிபந்தனையுடன் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர், குடிநீருக்கு மட்டுமே ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. எனவே மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சக்கூடாது என்று உறுதியுடன் கூறிவிட்டார்.

எனவே, எங்களுக்கு உடனடியாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதி அளித்தால்தான் சாலை மறியலை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே”, “சீண்டாதே சீண்டாதே விவசாயிகளை சீண்டாதே”, “வேண்டும் வேண்டும் வாடும் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்”, “வஞ்சிக்காதே வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே”, “துண்டிக்காதே துண்டிக்காதே மின்சாரத்தை துண்டிக்காதே”, “எதிரொலிக்கும் எதிரொலிக்கும் எங்கள் எண்ணம் தேர்தலில் எதிரொலிக்கும்” போன்ற முழக்கங்களாய் எழுப்பினர்.

இதுகுறித்து கோபி ஆர்.டி.ஒ. கோவிந்தராஜன், பொதுப்பணித்துறை கோட்டப் பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ராமசாமி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளை அழைத்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண விவசாயிகளும், அரசு அதிகாரிகளும் கூடி பேசும் வரை மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படாது. வழக்கம்போல் விவசாயிகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்’ என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் 12 மணியளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

tags
click me!