குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல்…

Asianet News Tamil  
Published : Jul 20, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெற்றுக் குடங்களுடன் சாலை மறியல்…

சுருக்கம்

More than 100 people held in road block protest for drinking water

இராமநாதபுரம்

மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்ட திருவாடானை யூனியன் சம்பூருணி கிராம மக்கள் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை யூனியன் மங்கலக்குடி அருகே உள்ளது சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்பு. இங்கு சுமார் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்கலக்குடி – அஞ்சுகோட்டை சாலை புதிதாக அமைக்கும் பணி நடைப்பெற்றது. அப்போது ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலை மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த கூட்டுக் குடிநீர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை அதிக அளவில் சேதப்படுத்தி விட்டனர்.

இதனால் சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலுமாக தடைபட்டதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து பல நாட்களாகியும் இப்பகுதிக்கு செல்லும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதுகுறித்து மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டன.

ஆனால் மங்கலக்குடி நீரேற்று நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் திறக்க அங்குள்ள அலுவலர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் தாலுகா விவசாயிகள் சங்க செயலாளர் சேதுராமு தலைமையில் நேற்று வெற்றுக் குடங்களுடன் மங்கலக்குடி நான்கு முனை சந்திப்பில் தேவகோட்டை – ஓரியூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டல அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைராஜ், திருவாடானை காவல் உதவி ஆய்வாளர்கள் முருகானந்தம், கணேசன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷாவின் முரட்டு அடிமை., துரோகத்திற்கான நோபல் பரிசு..! இபிஎஸ்ஐ பொளந்து கட்டிய துணை முதல்வர்..
விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்