
தொடர் மழை காரணமாக சிதம்பரம் அருகே உள்ள தரைப்பாலம் ஒன்று உடைந்து விழுந்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களும், பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று காலை இலங்கைக்கு தேற்கே, சுமார் 500 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த தாழ்வு மண்டலம், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இலங்கையில் இருந்து 185 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதனால், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏரிகள், அணைகள் என அனைத்தும் நிரம்பி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அத்திப்பட்டு கிராமம் அருகே உள்ள தரைப்பாலம் உள்வாங்கியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை வழியாக குமராட்சி செலலும் சாலையில் இந்த தரைப்பாலம் உள்ளது. இது கடந்த செவ்வாய் அன்று உள்வாங்கி உடைந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வல்லம்படுகை, அத்திப்பட்டு, நளன்புத்தூர், வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, பூலாமேடு, நந்திமங்கலம், குமராட்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தரைப்பாலத்தை உடனடியாக அமைத்து, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.