BJP Leader Annamalai : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாக ஒரு கூறும் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோ குறித்து காவல்துறை துணை கொண்டு விசாரிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான திரு. கிரந்திகுமார் அவர்களும் X தளத்தில் பதிலளித்திருந்தார். இப்போது பொதுவெளியில் அரசியல் உள்நோக்கத்தோடு பகிரப்படும் இந்த வீடியோ சரியாக எட்டு மாதம் முன்பாக ஜூலை 2023, காலகட்டத்தில் எடுக்கப்பட்டது.
"என் மண் என் மக்கள்" யாத்திரையை ஒட்டிய நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திரு. அண்ணாமலை அவர்களுக்கு அன்போடு ஆரத்தி எடுத்த ஒரு சகோதரிக்கு, பதில் மரியாதையாக கொடுக்கப்பட்ட பணத்தினை கூட வைத்து இப்படி அரசியல் செய்ய முடியுமென நினைக்கிறார்கள் சிலர். தமிழ்நாட்டு மண்ணில் ஆரத்தி எடுப்பதும், ஆரத்தி எடுப்பவர்க்கு அன்பாக ஆரத்தி காசு கொடுப்பதும் காலம் காலமாக வழங்கி வரும் வழக்கம்.
ஆனால் இது தேர்தல் காலம். ஆரத்தி எடுத்தாலும் பணம் கொடுக்க கூடாது, அதை மீறி கொடுத்தால் அது வாக்குக்கு கொடுக்கப்பட்ட லஞ்சமாகவே கருதப்படும் என்பதை எல்லோரும் அறிவர். எனவே இந்த வீடியோவுக்கும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கும், இப்போது நடந்து வரும் பிரச்சாரத்திற்கும் துளியும் தொடர்பு இல்லை. இந்த தவறான செய்தியை பரப்புவோரின் உள்நோக்கத்தை கண்டறிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவன்போடு ஊடகங்களின் வாயிலாக வேண்டுகிறோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கூறியுள்ளது.
மேலும் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்.
ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம்!