
தர்மபுரி,
வாக்குறுதியைக் காப்பாற்றாத மோடியே, விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்று விவசாயிகள் சங்க அகில இந்திய செயலாளர் விஜூகிருஷ்ணன் தெரிவித்தார்.
“விவசாயத்தை காப்போம், விவசாயிகளை காப்போம்” என்ற தலைப்பில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டது.
அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் விஜூ கிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரப் பயணக் குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்தனர்.
இதையொட்டி இந்தப் பிரசாரப் பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டம் தர்மபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன் தலைமை தாங்கினார்.
விவசாயிகள் சங்க அகில இந்திய செயலாளர் விஜூகிருஷ்ணன், அகில இந்திய துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில துணைத்தலைவர் முகமது அலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, மாரிமுத்து, மாவட்ட செயலாளர் குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளின் நிலை குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க அகில இந்திய செயலாளர் விஜூகிருஷ்ணன், “தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. இதனால் நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் மராட்டிய மாநிலத்தில் 2015–ஆம் ஆண்டில் மட்டும் 3,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு ரூ.230 தினக்கூலி நிர்ணயித்தாலும், பெரும்பாலான இடங்களில் ரூ.60 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24–ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பேரணியில் ஒரு இலட்சம் விவசாயிகள் பங்கேற்கிறார்கள்” என்று அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து பிரச்சாரப் பயணக் குழுவினர் பங்கேற்ற ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் பென்னாகரத்தில் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரப் பயணக் குழுவினருக்கு பாலக்கோட்டில் மாவட்ட பொருளாளர் குப்புசாமி தலைமையிலும், பாப்பாரப்பட்டியில் மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி தலைமையிலும், இண்டூரில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டசெயலாளர் அர்ச்சுனன் தலைமையிலும், வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சாரப் பயணத்தில் 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் பங்கேற்றனர்.