
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோர்வை உருவாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால் நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற முயற்சியின் விளைவாக கட்சியில் பிளவு உருவாகியது.
வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். அதன் பின்னர் பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் மீண்டும் சமரசம் உருவாகி அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியில் ஐக்கியமாகினர். ஆனால் இதற்குள் 4 உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியான தவெகவில் ஐக்கியமாகினர்.
தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் விஜயபாஸ்கர், சண்முகம் மட்டும் பொதுச்செயலாளரை சந்திக்காமல் மௌனம் காத்து வந்தனர். இந்த நிலையில் விராலிமலை உறுப்பினரான விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?#JustAsking— Dr.C.Vijayabaskar (@Vijayabaskarofl) June 16, 2026
முன்னதாக கடந்த சில தினங்களாக அதிமுக பொதுச்செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் இணையத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த விஜயபாஸ்கர் “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்” போன்ற கருத்துகளை தெரிவித்தார்.
இந்த நிலையில் சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்த விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.