தென் மாவட்டங்கள் கனமழை: முதல்வர் ஸ்டாலின் பயணம் மீண்டும் தள்ளி வைப்பு!

By Manikanda PrabuFirst Published Dec 20, 2023, 4:49 PM IST
Highlights

தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ள முதல்வர் ஸ்டாலினின் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி  மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறு, குளங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Latest Videos

மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகள், நிவாரண பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லி சென்றிருந்த அவர் நேரடியாக விமானம் மூலம் தூத்துக்குடி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னை வந்த முதல்வர் ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து விட்டு இன்றிரவு மதுரைக்கு செல்லவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக அவர் பேசினார். தொடர்ந்து, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் அறிவுறுத்தினார்.

மக்களவையில் இருந்து இன்றும் 2 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: மொத்த எண்ணிக்கை 143!

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவுள்ள முதல்வர் ஸ்டாலினின் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்றிரவுக்கு பதிலாக நாளை காலை மதுரை செல்லவுள்ள ஸ்டாலின், அங்கிருந்து மழை, வெள்ள பாதிப்புகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து கொண்டு, சாலை மார்க்கமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை முழுவதும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான நிதியை விரைவில் விடுவிக்க வலியுறுத்தி இருக்கிறார். நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடியும் நிரந்தரத் தீர்வுக்காக ரூ.12,659 கோடியும் வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார். தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.2000 நிதியை உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!